திருமதி. K.T.ஹேமா M.A.,M.Phil

துணைமுதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர்

1. உங்களைப் பற்றிய விவரங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளவும். மற்றும் முதல் நாள் வகுப்பறை அனுபவம் பற்றியும் கூறவும்.
அன்பான தாய் தந்தையர், மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகளோடு கூடிய எளிய, பெரிய குடும்பத்தைச் சார்ந்தவள் நான். எங்களுடைய சொந்த ஊர் சோளிங்கர் அருகில் உள்ள குன்னத்தூர் என்கின்ற கிராமம். என்னுடைய பெயரின் முதலெழுத்து ‘K’ எங்கள் ஊரைக் குறிப்பது தான். பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு எல்லாம் சென்னையில் தான். தமிழில் M.Phil முடித்து ஒன்பது மாதம் கழித்து இறை அருளால் சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை துணைப் பேராசிரியராய் பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பணிக்கான அடித்தளம் இங்கு தான் போடப்பட்டது. சிறந்த கட்டுப்பாடு நிறைந்த கல்லூரி வேலையைக் கற்றுக் கொடுத்த புனிதக் களம் அது. எப்போதுமே என் நினைவில் பசுமையாய் நிறைந்திருப்பது. அந்த ஏழு வருடங்களில் என்னை நான் செதுக்கிக் கொண்டேன் என்பது தான் உண்மை.

என்னுடைய முதல் நாள் வகுப்பு எடுத்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் எடுத்தத் தலைப்பு ‘உரைநடை இலக்கிய வரலாறு’. சிறிது தமிழ் இலக்கணத்தோடு விவரிக்க வேண்டிய பகுதி. ஒரு மணி நேரம் பாடம் நடத்தி விட்டு வகுப்பை விட்டு வெளியே வந்தேன். உள்ளங்கையெல்லாம் வேர்த்திருந்தது. என் துறைத்தலைவர் மறுநாள் என்னிடத்தில் வந்து, ‘என்ன! மாணவியர்களுக்கு இலக்கணமெல்லாம் நடத்தி பயமுறுத்தி விட்டு வந்திருக்கிறாய்?’ என்றார். உண்மையில் பயந்தது நான் தான் என்பது இந்த நிமிடம் வரை யாருக்கும் தெரியாது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். நல்ல அனுபவம்!

2. ஆசிரியராக இல்லாமல் இருந்தால் தற்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?
என்னுள் அடிக்கடி எழும் வினா தான். இன்று வரை விடை கிடைக்கவில்லை. கடவுள் சித்தம்.
       ‘அன்ன யாவினும் புண்ணியம் கோடி
        ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’

அப்படிப்பட்ட புண்ணியச் செயலைச் செய்ய இறைவன் எனக்கு அருளியிருக்கின்றான். இறைவனுக்கு என் கோடான கோடி நன்றி.

3. தங்களை மிகவும் கவர்ந்த திருக்குறள் ஒன்றினைக் குறிப்பிடுக. ஏன்?
1330 குறள்களுமே அரிய முத்துக்கள். எந்த முத்தைத் தேர்ந்தெடுப்பது? சற்று கடினம் தான். இருப்பினும் என் சிற்றறிவுக்கு எட்டிய ஒரு முத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
        ‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
         மாலை மலரும்இந் நோய்.’

‘காதல் நோய்’ காலையில் அரும்பிப் பகலில் மொட்டாகி மாலையில் மலர்கிறது என்கிறார் வள்ளுவர். காதல் என்ற அழகிய உணர்வை இதைவிட யாராலும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியாது.

4. நீங்கள் சிறுகதை/கவிதை/கட்டுரை என்று ஏதாவது எழுத முயற்சி செய்தது உண்டா? ‘ஆம்’ என்றால் அதற்கான விளக்கங்களைத் தரவும். ‘இல்லை’ என்றால் இப்போது அதற்கான ஏதாவது திட்டம் தீட்டியுள்ளீர்களா? அப்படியென்றால் எந்தப்பகுதியில் எழுதத் திட்டம் செய்துள்ளீர்கள்?
முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போதே இதற்கான பயிற்சி வகுப்புகள் எங்களுக்கு உண்டு. என் ஆசிரியர்கள் வழிகாட்டியுள்ளனர். கவிதைகள் எழுதியுள்ளேன். ஓரிரு சிறுகதைகள், ஓரிரு நாடகங்கள் எழுதியுள்ளேன். என்னுடைய ஒரு கட்டுரை நம் கல்லூரி இதழில் வெளி வந்துள்ளது. நிறைய யோசிப்பேன். தோன்றும் பொழுதெல்லாம் எழுதுவேன். எதையும் வெளியிட்டதில்லை. யாரையும் தொல்லை படுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணம் தான்.

5. சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம் அல்லது எந்தப் புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்துள்ளீர்கள்?
விக்ரமன் அவர்கள் எழுதிய ‘நந்திப்புரத்து நாயகி’ (3 பாகம்). அதில் முதல் பாகத்தைப் படித்து விட்டேன். அடுத்து இரண்டாவது பாகத்தைப் படிக்க வேண்டும். கல்கி அவர்கள் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’         (படிக்க, படிக்க சலிப்பை ஏற்படுத்தாத நூல்) என்ற நூலில் உள்ள சில கதை முடிச்சுகளுக்கு விடை தேடும் நூல். ஆனால் இருவருடைய எழுத்து நடை வேறு வேறு.

6. தமிழ் மொழி பற்றிய இன்றைய இளைய சமுதாயத்தின் மனப்போக்கினை விவரிக்கவும்.
தமிழில் ஆர்வமுடைய கூட்டம் ஒருபுறம். தமிழை மொத்தமாய் புறக்கணிக்கின்ற கூட்டம் இன்னொரு புறம். இதில் இரண்டாவது தான் அதிகம். இன்று, இலக்கிய முருகியல் உணர்வு இளைய சமுதாயத்திடையே அருகி வருவது தான் நிதர்சனமான உண்மை. தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நாட்டம், விழைவு குறைந்துள்ளது. ‘தமிழ்’ என்ற பாடப் பகுதியையே இஷ்டப்பட்டு படிப்பதில்லை. கஷ்டப்பட்டு தான் படிக்கிறார்கள். இளைய சமுதாயத்தின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் தீர்க்கதரிசி பாரதியின் ‘ மெல்லத் தமிழ் இனிச் சாகும் ' என்ற கூற்று மெய்யாகி விடுமோ என்ற அச்சம் என்னுள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் இளைஞர்கள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கைக் கீற்று உள்ளது.

7. உங்கள் குரல் ஒலிவாங்கியில் (Micro Phone) கேட்க நன்றாய் உள்ளது. நீங்கள் முன்பு ஏதாவது நிகழ்ச்சிகளில் தொகுப்புரை வழங்கிய அனுபவம் உள்ளதா? ஆம் என்றால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளவும்.
பாராட்டுதல்களுக்கு முதலில் நன்றி. நான் முன்பு பணியாற்றிய வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் ‘வள்ளியம்மாள் மணிமண்டபத் திறப்பு விழா’ வின் போது காஞ்சி மடத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி, ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி இருவரும் வந்திருந்தனர். அந்த விழாவிற்குத் தொகுப்புரை வழங்கும் பெரும்பேறு கிட்டியது. அதுவே என்னுடைய முதல் தொகுப்புரை. நம் கல்லூரியில் பல விழாக்களுக்குத் தொகுப்புரை வழங்கியுள்ளேன்.

8. நம் தாய்மொழியின் மீது மற்றைய மொழிகளின் ஆளுமை பற்றி..................
இன்று பிறமொழிகளின் ஆளுமை தமிழில் நிலவி தான் வருகிறது. இயல்பாக நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போதே பிறமொழிச் சொற்களை ( குறிப்பாக ஆங்கிலச் சொற்களை ) சிறப்புத் தமிழ் படித்தவர்கள் உள்பட எல்லோரும் கலந்தே பேசி வருகிறோம். இன்றைய குழந்தைகளுக்குத் தமிழ்ச் சொற்களின் பொருளை ஆங்கிலச் சொற்கள் வழி விளக்க வேண்டிய அவல நிலையில் உள்ளோம். நல்ல தமிழில் பேசுகின்றவர்களை நகைப்பாகப் பார்க்கின்றவர்கள் தான் இன்று அதிகம். ‘தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ் தான் இல்லை’ என்ற பாரதிதாசன் கூற்று தான் என் நினைவிற்கு வருகிறது. இருப்பினும் தமிழின் தொன்மையை, வளமையை அவ்வளவு சீக்கிரம் யாரும் சிதைத்து விட முடியாது.

9. தமிழ்த் துறையின் தலைமை - துணைமுதல்வர் எது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? ஏன்?
தமிழ்த் துறைத் தலைமை - துணைமுதல்வர் இரண்டில் எது பிடித்தது என்பதை விட எதில் பொறுப்பு அதிகம் என்பதில் தான் என் கவனம் உள்ளது. இரண்டும் பொறுப்பான பதவிகள். தமிழ்த்துறையின் தலைமை வாழைத்தண்டில் கால் பதித்து நடப்பது போல. துணைமுதல்வர் பொறுப்பு கூரிய கத்தி முனையில் நடப்பது போல. அழுந்த வைத்தால் காலை பதம் பார்த்து விடும். தமிழ்த்துறையின் தலைமையில் கருத்து சுதந்திரம் உண்டு. அடுத்ததில் மற்றவர் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து செயலாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. இரண்டையுமே என் மீது நம்பிக்கை வைத்து கல்லூரி நிர்வாகம் எனக்கு வழங்கியுள்ளது. கண்ணாடி பாத்திரத்தைக் கையாள்வது போலத் தான் செயல்பட வேண்டும். இருப்பினும் என் முதல் ஓட்டு தமிழ்த்துறை தலைமைக்குத்
------------தான்!

10. வெகு காலமாக இந்தக் கல்லூரியில் பணியாற்றி வருகிறீர்கள். அந்தப் பயணம் பற்றி விளக்கவும். உங்களை இந்தக் கல்லூரி எப்படி வடிவாக்கம் செய்தது? கல்லூரி வளர்ச்சியில் இனி வரும் காலங்களில் உங்கள் பங்களிப்பு..............
இக்கல்லூரியில் பணியாற்றி பத்தொன்பது வருடங்கள் ஆகி விட்டன. முதலில் பேராசிரியர் - பிறகு துறைத் தலைமை - பின்பு முதல்வர் பொறுப்பு - இப்போது துணைமுதல்வர். நிறைய, நிறைய அனுபவங்கள். எல்லா முதல்வர்களோடும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் ஒவ்வொன்றை நான் கற்றுக் கொண்டேன். ஆத்மார்த்தமாக அன்பு காட்டிய, காட்டும் நிறைய நண்பர்கள். பணியிலிருந்து சென்றவர்கள் இன்றும் என்னோடு தொடர்பில் இருக்கின்றார்கள். என் துறை ஆசிரியர்களைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. அவர்கள் என்னுடைய ‘சகோதரர்கள்’. எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான, சிறந்த நிர்வாகம். இவர்கள் அத்தனைப் பேரின் உதவியோடு பணிகளை என் திறமைக்கு உட்பட்டு செய்து வருகிறேன். நம் கல்லூரியின் பெயர் பெரிய அளவில் வெளியே வராமல் இருக்கிறதே என்ற ஏக்கம் என் மனதில் இழையோடிக் கொண்டே இருக்கிறது. ' கனவு மெய்ப்படும் ' என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. அதை நோக்கி அனைவரும் இணைந்து செயல் படுவோம். இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி.